குற்றம்

போலீசாரை தாக்கிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அதிரடி கைது

போலீசாரை தாக்கிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அதிரடி கைது

Rasus

சேப்பாக்கத்தில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மைதானத்திற்குள் காலணி வீசியது.. காவல்துறை மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்டவை தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த 4000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏராளமானோர் போராட்டம் நடத்தியதால் போராட்டக்காரர்கள் மீதும் காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதேபோல போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலரும் காவல்துறையினரை தாக்கினர். காவல்துறையினர் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. தாக்குதலில் 3 காவலர்கள் காயம் அடைந்துள்ளர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவருக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போராட்டத்தின்போது போலீசாரை தாக்கிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 10 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலைமுயற்சி உள்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மைதானத்திற்குள் காலணி வீசப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாகவும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.