நகைக் கடையில் நடந்த கொள்ளை சம்பவம் Pt web
குற்றம்

கர்நாடகா | துப்பாக்கிமுனையில் 5 கோடி மதிப்பிலான கொள்ளை., காவல்துறை விசாரணை!

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே பட்டப்பகலில் நகைக்கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம் உன்சூர் பேருந்து நிலையம் பின்புறம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கை கோல்ட் அண்ட் டைமண்ட் நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த நகைக்கடையில் அஸ்கர் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று, மதியம் 1.30 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் நகைக் கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில், சுமார் 5 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

காவல்துறை விசாரணை

இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உன்சூர் புறநகர் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்துப் பேசிய தென் மண்டல ஐஜிபி போரலிங்கையா, "இரண்டு பைக்குகளில், ஐந்து பேர் வந்து துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டியதாக நகைக்கடை ஊழியர்கள் தெரிவித்தனர். அந்தக் கும்பல் கடையில் 8-9 நிமிடங்கள் இருந்தது. எவ்வளவு தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்திருக்கிறார்.

சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், இந்தக் கடையை திறந்து 7 மாதங்கள்தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.