குற்றம்

பிரதமர் மோடி வீட்டை தகர்ப்போம் - மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு

webteam

பிரதமர் நரேந்திர மோடியின் வீடு, டெல்லி ராஜீவ் சவுக் மெட்ரோ ரெயில் நிலையம் ஆகியவற்றை குண்டுகளால் தகர்க்கப் போவதாக வந்த மர்ம தொலைபேசி அழைப்பால் டெல்லி போலீஸ் வட்டாரத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி போலீஸ் தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை சுமார் 8.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், பிரதமர் நரேந்திர மோடியின் வீடு, டெல்லி ராஜீவ் சவுக் மெட்ரோ ரெயில் நிலையம், பங்கலா சாஹிப் சீக்கிய கோயில் ஆகிய இடங்களை வெடிகுண்டுகளால் தகர்க்கப் போவதாக எதிர்முனையில் தெரிவித்த நபர், தனது கைபேசி இணைப்பை உடனடியாக துண்டித்து விட்டார். இதையடுத்து, பரபரப்பு அடைந்த டெல்லி நகர போலீசார் மேற்கண்ட மூன்று இடங்களுக்கு மோப்ப நாய்களுடன் மூன்று தனிப்படைகளை அனுப்பி வைத்தனர். அந்த இடங்களை வெகு துல்லியமாக பரிசோதித்தபோது அங்கு ஆபத்தை விளைவிக்ககூடிய வெடிப்பொருட்கள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்தனர். 

எனவே, போலியாக மிரட்டல் விடுத்து போலீசாரை அலைச்சலுக்குள்ளாக்கிய நபரின் கைபேசி எண்ணை அடிப்படையாக வைத்து அவரது முகவரியை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் டெல்லி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர், இதேபோல் ஒருவர் டெல்லி செங்கோட்டையை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்திருந்தார். பின்னர், போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், பொழுதுபோக்குக்காக அப்படி செய்ததாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.