தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கீழநீலிதநல்லூரை சேர்ந்தவர் 24 வயதான பிரியா. பி.பி.ஏ. பட்டதாரியான இவருக்கும் குருவிகுளத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 10 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. திருமணத்தின் போது 10 பவுன் நகை மற்றும் மாப்பிள்ளைக்கு செயின், மோதிரம் உள்ளிட்டவை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ஆனால் அதன்பிறகும் கூடுதல் வரதட்சணை கேட்டு மாரிமுத்து, அவரது தந்தை செல்வராஜ், தாயார் மாரியம்மாள் ஆகியோர் பிரியாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஓரிருமுறை பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய பிரியாவை, மாப்பிள்ளை வீட்டார் சமாதானம் பேசி அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த 27ம் தேதி ப்ரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரியாவின் தந்தை நாராயண சுந்தர்ராஜ் மற்றும் உறவினர்கள் நேற்று தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
அங்கு அவர்கள் கொடுத்துள்ள மனுவில், ‘’பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்தனர். ஆனால் நாங்கள் சென்று பார்ப்பதற்கு முன்பே உடலை கீழே இறக்கி வைத்து விட்டனர். அவரது உடலில் தூக்கு மாட்டிய தடயத்திற்குப் பதிலாக பல இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.
எனவே பிரியாவின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோட்டாட்சியரிடம் ஏற்கனவே மனு கொடுத்தோம். ஆனால் இன்று வரை அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளனர்