குற்றம்

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்கிய மர்ம கும்பல் - போதை மாத்திரைகள் பறிமுதல்

webteam

மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது செய்த போலீசார் 580 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

மதுரை பெருங்குடி வளையங்குளம் பகுதியில் தனிப்படை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் பயங்கர ஆயுதங்களுடன் மறைந்திருந்த 5 நபர்கள், காவல் துறையினரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளனர். உடனடியாக அவர்களை சுற்றிவளைத்து பிடித்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பெருமாள் நகரைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன், லெட்சுமணன், லிங்கப்பெருமாள், அஜித்குமார் ஆகியோர் என தெரியவந்தது. ஐந்து பேரும் கூட்டாக இணந்து அவ்வழியாக வருபவர்களிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டிருந்ததோடு, போதை மாத்திரைகளை விற்பனை செய்தும் வந்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் சோதனை செய்ததில் இரண்டு பெரிய வாள் மற்றும் 580 போதை மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டு வழிப்பறி, கொலைமுயற்சி, போதைபொருள் வைத்திருத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, போதைப்பொருள் விற்பனை செய்தல் மற்றும் ரவுடித்தனம் ஆகிய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தொடர்ந்து இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.