குற்றம்

மைலாப்பூர் தம்பதி கொலை வழக்கு - புதைக்கப்பட்ட இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட உடல்கள்!

Sinekadhara

சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி கொலைவழக்கில், பண்ணை வீட்டில் தோண்டி எடுக்கப்பட்ட உடல்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்(60) தன் மனைவி அனுராதா(54) உடன் மகளின் பிரசவத்துக்காக கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். தம்பதி இருவரும் நேற்று(சனிக்கிழமை) காலை சென்னை திரும்பி உள்ளனர். அமெரிக்காவில் இருந்து அவர்களது மகள் சுனந்தா மற்றும் மகன் சஸ்வத் இருவரும் தொடர்புகொண்டபோது, பெற்றோர் இருவரின் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுனந்தா மற்றும் சஸ்வத் இருவரும் பிறகு சென்னையிலுள்ள தன் உறவினர்களை மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்குச் சென்று பார்க்க சொல்லியபோது தம்பதி இருவரும் அங்கு இல்லை எனத் தெரிந்தது.

இதையடுத்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சுனந்தா தனது உறவினர்கள் மூலம் புகார் தெரிவிக்க வைத்தார். பிறகு அந்த வீட்டில் சோதனை நடத்திய போலீஸார் விசாரணையைத் துரிதப்படுத்தினர். குற்றவாளிகள் ஆந்திர மாநிலம் ஓங்கோல் சோதனை சாவடியில் இருப்பது தெரியவந்தை அடுத்து, ஆந்திர போலீஸாரின் உதவியுடன் அவர்களைக் கைது செய்தனர்.

பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், ஆடிட்டர் ஸ்ரீகாந்த் வீட்டில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்கிற மதன்லால் கிருஷ்ணா, டார்ஜிலிங்கில் உள்ள தனது நண்பர் ரவியுடன் இணைந்து இந்த கொடூர சம்பவத்தை நடத்தியது தெரியவந்துள்ளது. நீண்ட நாட்களாக ஆடிட்டர் வீட்டில் இருந்து நகைகளைக் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த கிருஷ்ணா, அமெரிக்காவில் இருந்து அவர்கள் வீடு திரும்பியதும், தான் தீட்டியிருந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவுசெய்து மயிலாப்பூரில் உள்ள வீட்டில் வைத்து கொலைசெய்து, கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலி அருகில் உள்ள சூளேரிக்காடு பகுதியில் அவர்களுக்கு இருந்த பண்ணை வீட்டில் உடல்களைப் புதைத்துவிட்டு, கொள்ளையடித்த நகைகளுடன் தப்பி சென்றதாகக் கூறப்படுகிறது.

இதற்காக கடந்த மாதமே தன் மனைவி மற்றும் குழந்தைகளை நேபாளத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவத்துக்கு ரவி மூளையாக செயல்பட்டதும், கிருஷ்ணாவின் தந்தை 20 ஆண்டுகளாக அந்த வீட்டில் பணிபுரிந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை தெற்கு கூடுதல் இணை ஆணையர் கண்ணன், மயிலாப்பூர் உதவி ஆணையர் கவுதம் முன்னிலையில் குற்றவாளி கிருஷ்ணா, அவரது கூட்டாளி ரவி ஆகியோரை அழைத்துவந்து போலீசார் 6-அடி பள்ளத்தில் புதைக்கப்பட்டிருந்த இருவரின் சடலங்களை தோண்டி எடுத்தனர். தொடர்ந்து அவர்களது உடல் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. நாளை மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது