குற்றம்

'எனது வாட்ஸ்அப் இனி இயங்காது' கொலையாவதற்கு முன் மாற்றுத்திறனாளி பெண் அனுப்பிய இறுதி மெசேஜ்

JustinDurai

ஆந்திராவில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திரா மாநிலம் பிரகசம் மாவட்டம் தசராஜுபள்ளி சாலையில் உள்ள ஒரு குளம் அருகே மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அவரது மூன்று சக்கர வாகனத்துடன் எரிக்கப்பட்டு பிணமான நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி கொலையானவர் யார், கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

சம்பவ இடத்தில் தடயங்களை தேடிய போலீசார், கொலையான பெண்ணின் ஹேண்ட்பேக்கை கண்டெடுத்தனர். அதில் அந்த பெண்ணின் ஆதார் அட்டையும் மொபைல் போனும் இருந்தது. விசாரணையில் இறந்த பெண்ணின் பெயர் உம்மானேனி புவனேஸ்வரி என்பதும் அவர் ஓங்கோலின் புறநகரில் உள்ள கம்மபாலத்தில் வசிப்பவர் என்பதும் தெரியவந்தது. புவனேஸ்வரி நாராயண பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வந்துள்ளார்.  மேலும் கிராம தன்னார்வலராகவும் பணியாற்றினார்.

புவனேஸ்வரி இறப்பதற்கு முன்பு தனது செல்போனில் இருந்து அனைவருக்கும் ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், "எனது வாட்ஸ்அப் இனி இயங்காது. தயவுசெய்து என்னை இனி சந்திக்க முயற்சிக்காதீர்கள்" என மெசேஜ் அனுப்பபட்டிருந்தது.

இறந்த உடலுக்கு அருகில் இருந்து பெட்ரோல் கேன் அல்லது எரியக்கூடிய பொருள் எதையும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாலை 6.49 மணிக்கு தனது மகளிடம் பேசியதாக புவனேஸ்வரியின் தாய் போலீசாரிடம் கூறினார். புவனேஸ்வரி தனது தாயாரிடம் அரை மணி நேரத்திற்குள் வீட்டிற்கு வந்துவிடுவதாக கூறியுள்ளார். இரவு 7.30 மணியளவில் புவனேஸ்வரி வீடு திரும்பாதபோது, அவரது தாயார் போன் செய்துள்ளார். ஆனால் புவனேஸ்வரியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘’புவனேஸ்வரி தனது மூன்று சக்கர வாகனத்தில் உட்கார்ந்தபடி எரிக்கப்பட்டு இறந்துள்ளார். ஆனால் அவரது கைகள் கட்டப்படவில்லை. "இது ஒரு கொலை வழக்கு போல் தெரிகிறது. அவரை கொலை செய்து பின்பு தீ வைத்திருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது’’ என்றனர்.