குற்றம்

100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆபாசமாக பேசி வசமாக சிக்கிய இளைஞர்

kaleelrahman

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் செல்போனில் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் கடந்த சில மாதங்களாக மர்ம நபர் ஒருவர் ஒரே எண்ணிலிருந்து செல்போன் மூலம் ஆபாசமாக பேசி வந்ததோடு, அவர்களின் உடல் அங்கங்களை ஆபாசமாக வர்ணித்து தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பல பெண்கள் தொலைபேசி மூலம் காவல்துறையினருக்கு புகார் அளித்தாலும் யாரும் நேரடியாக வந்து புகார் அளிக்காததால் குற்றவாளியை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல்கள் ஏற்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை நகர் பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத பெண் ஒருவர் மர்ம நபர் ஒருவர் தனது செல்போன் எண்ணிற்கு அடிக்கடி தொடர்பு கொள்வதாகவும் அந்த நபர் தன்னிடம் ஆபாசமாக பேசுவதோடு, தனது ஆசைக்கு உடன்படாவிட்டால் கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார் உத்தரவிட்டதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் உதவியோடு தனிப்படை அமைத்து கணேஷ் நகர் காவல் ஆய்வாளர் அழகம்மாள் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை கண்காணித்தனர். அப்போது பெண்களிடம் ஆபாசமாக பேசியது சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கார்த்திகேயன் என்பது தெரியவந்தது.


இதனையடுத்து கடந்த ஒருவார காலமாக தனிப்படை போலீசார் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பகுதியில் முகாமிட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளி கார்த்திகேயனை கைது செய்தனர். மேலும் அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட செல்போன் எண் அவனது நண்பன் பெயரில் வாங்கப்பட்டது என்பதும் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த பெண்களை குறிவைத்து கார்த்திகேயன் செல்போன் மூலம் ஆபாசமாக பேசி வந்ததும் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இதுவரை நேரடியாக புகார் அளிக்காததால் தான் தொடர்ந்து பல்வேறு பெண்களிடம் இதுபோல் பேசியதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.


இதனையடுத்து குற்றவாளி கார்த்திகேயன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.