மும்பையில் 22 வயது இளைஞரை அடித்து கொலை செய்த நான்கு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த இளைஞரை ஒரு கும்பல்தான் அடித்துக்கொன்றது என்று காவல்துறை தரப்பில் கூறுகின்றனர்
இறந்த இளைஞரின் பெயர் தேவேந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளது. நான்கு கான்ஸ்டபிள்களான அங்குஷ் பால்வே, திகம்பர் சவான், சந்தோஷ் தேசாய் மற்றும் ஆனந்த் கெய்க்வாட் ஆகியோரால் இவர் தாக்கப்பட்டதாக உள்விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது, இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் உள்ளன. குற்றம் சாட்டப்பட்ட நான்கு போலீசாரும் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பேசும் தேவேந்திராவின் குடும்பத்தினர் “ தேவேந்திரா குடும்பத்தினருடன் மே 29 அன்று தங்கள் உறவினரின் வீட்டிற்குச் சென்றார், அப்போது சில போலீசார் அவர்களைத் துரத்தினர். அவர்கள் தேவேந்திராவைப் பிடித்து குடும்பத்தினரிடம் ஜுஹு காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரிப்பதாகக் கூறினர். மறுநாள் காலையில், தேவேந்திரா சுயநினைவற்ற நிலையில் கிடந்ததாக போலீசார் எங்களிடம் தெரிவித்தனர். அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர்” என்கின்றனர்
இந்த விசாரணையின்போது, அரசாங்கத்தின் வழக்கறிஞர் பூர்ணிமா காந்தாரியா, சி.சி.டி.வி காட்சிகள் தேவேந்திராவை "ஒழுங்குபடுத்துவதற்காக" ஃபைபர் லத்திகளால் போலீஸார் தாக்கினர் என்று தெரிவித்தார். வழக்கறிஞர் ஃபிர்தாஸ் ஈரானி மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தேவேந்திராவின் மரணம் மற்றும் வேறு சில காவல்துறையின் கொடூர நிகழ்வுகளையும் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையின் மிருகத்தனம் காரணமாக மரணமடைந்த தேவேந்திரா குறித்து அனைத்து மூத்த அதிகாரிகளும் அறிந்திருந்ததால் வழக்கை முடக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஈரானி கூறினார். ஏற்கனவே பொதுமுடக்கத்தின்போது ஒருவரை போலீசார் கொன்றதாகவும், பலரை கொடூரமாக தாக்கியதாகவும் இவர் கூறினார்.