குற்றம்

திருப்பூர்: இரு குழந்தைகளை கம்பியால் அடித்துக்கொன்ற தாய்... தலைவலிதான் காரணமா?

webteam

திருப்பூர் அருகே தலைவலியால் அவதிப்பட்டு வந்த தாய் தனது இரு குழந்தைகளை கம்பியால் அடித்துக் கொலை செய்து விட்டு பூச்சி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக் கோவில் அத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் கனகசம்பத். இவர் அதே ஊரில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், ஹர்சிதா என்ற மகளும், கலைவேந்தன் எனும் மகனும் உள்ளனர். மகள் ஹர்சிதா 8-ம் வகுப்பும்., மகன் கலைவேந்தன் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்களுக்கு ஊரை ஒட்டியுள்ள தோட்டத்தில் ஒரு வீடும், ஊருக்குள் ஒரு வீடும் உள்ளது. ரேவதிக்கு கடுமையான தலைவலி இருந்து வந்ததால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே தலைவலி அதிகமாகும்போது ரேவதி மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் நடந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை, கனகசம்பத் கடை வீதிக்கு சென்று விட்ட நிலையில், பள்ளி முடிந்த வீட்டிற்கு வந்த தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ரேவதி ஊரை ஒட்டியுள்ள தோட்டத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது இரண்டு குழந்தைகளையும் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு, தானும் பூச்சி மருத்து குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார் ரேவதி.

வீடு திரும்பிய கனகசம்பத் இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், மனைவியை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அப்போது ரேவதி இரண்டு குழந்தைகளை கம்பியால் அடித்துக் கொன்று விட்டு, தானும் விஷம் குடித்துவிட்டதாக கணவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து ரேவதிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து வெள்ளக்கோவில் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று உயிரிழந்த இரண்டு குழந்தைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயே பெற்ற குழந்தைகளை கொடூரமாக அடித்து கொலை செய்து விட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.