குற்றம்

காதலுக்கு இடையூறு: குழந்தையை கம்பியால் தாக்கிய தாய் கைது!

காதலுக்கு இடையூறு: குழந்தையை கம்பியால் தாக்கிய தாய் கைது!

webteam

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் குழந்தையை கொடுமைப்படுத்தி சூடு வைத்த தாயை காவல்துறையினர் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே குஞ்சன்விளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வன் ‌- மகாலட்சுமி தம்பதி. இவர்களுக்கு ஹன்சிகா என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது. பெங்களூரில் வசித்து வரும் இவர்கள், குலசை முத்தாரம்மன் தசரா திருவிழாவிற்காக கடந்த 5 ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்தனர். திருவிழா முடித்துவிட்டு செல்வன் பெங்களூருக்குச் சென்ற நிலையில், மகாலட்சுமி குழந்தையுடன் சொந்த ஊரில் தங்கியுள்ளார். மகாலட்சுமிக்கு உள்ளூரில் ஒரு காதலர் இருந்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன், அவருடன் வெளியூர் சென்ற மகாலட்சுமி, தனி அறை எடுத்து காதலனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது குழந்தை இடையூறாக இருந்ததாம். இதனால் மகாலட்சுமி, குழந்தை ஹன்சிகாவை இரும்பு கம்பியால் தாக்கி கொடுமைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் வீட்டுக்குத் திரும்பிய அவர், குழந்தைக்கு சூடு வைத்துள்ளார்.

இந்நிலையில், பேரக் குழந்தையைக் காண வந்த செல்வனின் பெற்றொர் குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் மகாலட்சுமியை அழைத்து விசாரித்ததில் சூடு வைத்ததை ஒப்புக் கொண்டார். பின் அவரை கைது செய்து, வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். மகாலட்சுமியை சிறையில் அடைக்க நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். 

பாதிக்கப்பட்ட சிறுமி ஹன்சிகாவிற்கு மனநல ஆலோசனை அளிக்கவும், மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து குழந்தை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.