குற்றம்

கடை முன்பாக சிறுநீர் கழித்தவரை கொலை செய்ததாக தாய் மற்றும் மகன் மீது வழக்கு

கடை முன்பாக சிறுநீர் கழித்தவரை கொலை செய்ததாக தாய் மற்றும் மகன் மீது வழக்கு

kaleelrahman

ஓமலூர் பேருந்து நிலையத்தில் கடை முன்பாக சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தாய் மற்றும் மகனை கைது செய்த ஓமலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் நகரில் உள்ள கள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஓமலூர் பேருந்து நிலையத்தில் வளையல் கடை நடத்தி வருகிறார். அதேபோல் அவரது கடை அருகில் பச்சனம்பட்டி கிராமம் ஆட்டுக்காரனூரைச் சேர்ந்த சந்தோஷ் கதிர்வேல் என்பவரும் வளையல் கடை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில், நேற்றிரவு கடைகளை அடைக்கும்போது, சுப்பிரமணி என்பவர், சந்தோஷ் கதிர்வேலின் கடையின் முன்பாக சிறுநீர் கழித்துள்ளார். இதை பார்த்த சந்தோஷ் கதிர்வேலின் தாய் சுகுணா, தூரமாக சென்று சிறுநீர் கழிக்கக் கூடாதா என்று சுப்பிரமணியிடம் கேட்டுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த சந்தோஷ் கதிர்வேல், தாயுடன் தகராறில் ஈடுபட்ட சுப்பிரமணியை, கையால் தாக்கி, கழுத்தை நெரித்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட சுப்பிரமணி ஓமலூர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்துள்ளார். அப்போது சுப்பிரமணி ரத்தம் வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று உள் நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால், இன்று காலை சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்து விட்டார்.

இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கொலை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சந்தோஷ் கதிர்வேல் மற்றும் அவரது தாய் சுகுணா ஆகியோரை தேடி வருகின்றனர்.