குற்றம்

சென்னையில் மகளின் திருமணத்தை மீறிய உறவால் தாய் தந்தையர் கொடூரமாக கொலை

webteam

சென்னை குரோம்பேட்டை அருகே கணவன், மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டை அடுத்த ஜமீன் இராயபேட்டை, பிள்ளையார் கோயில் ஒன்றாவது குறுக்கு தெருவில் வசித்து வருபவர்கள் ஆறுமுகம் (59), மஞ்சுளா(50). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன். இதில் பெரிய மகள் வசந்தி கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து மோசஸ் என்ற நபருடன் உறவில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மோசஸ் குடித்து விட்டு வசந்தியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதனால் வசந்தி அவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மோசஸ், வசந்தியிடம் `நீ என்னோடு வரவில்லை என்றால், உன் அப்பா அம்மாவை கொலை செய்து விடுவேன்’ எனக்கூறி மிரட்டியுள்ளார். அதனை வசந்தி பொருட்படுத்தாமல் இருந்துள்ளார். இந்நிலையில் மோசஸ் ஒருவருடன் சேர்ந்து வந்து, ஆறுமுகம் மற்றும் மஞ்சுளா இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற சிட்லபாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலை செய்த நபர்களை தேடி வருகின்றனர்.