அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 73 விழுக்காடு சொத்து சேர்த்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக்கூறி தொடரப்பட்ட வழக்கில், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதி நிர்மல்குமார் விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ஆரம்பகட்ட விசாரணையில் வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாக சொத்து சேர்த்ததாக கூறி வழக்கை கைவிட முடிவெடுக்கப்பட்டதாகவும், ஆனால், தற்போது வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு ராஜேந்திர பாலாஜி சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆரம்பகட்ட விசாரணையை வைத்து முடிவெடுக்க முடியாது என்ற அரசு தரப்பு வழக்கறிஞர், தற்போது மேல் விசாரணை துவங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த வாதத்திற்கு பதிலளிக்கவும் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யவும் ராஜேந்திர பாலாஜி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதை ஏற்ற நீதிபதி நிர்மல்குமார், விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.