குற்றம்

சென்னை துறைமுக கழக நிரந்தர வைப்பில் ரூ.45 கோடி மோசடி - 11 பேர் கைது

Sinekadhara

சென்னை துறைமுகத்துக்குச் சொந்தமான நிரந்தர வைப்பு நிதியிலிருந்து 45 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் மேலும் 11 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

சென்னை துறைமுகத்தின் சார்பில் கோயம்பேடு இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 100 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது. இந்த நிலையில், தன்னை துறைமுகத்தின் துணை இயக்குநர் என அறிமுகம் செய்த நபர், 100 கோடி ரூபாயை இரு நடப்பு கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆவணங்களை பரிசீலித்த வங்கி நிர்வாகம், தலா 50 கோடி ரூபாயை இரு கணக்குகளுக்கு மாற்றினர். அந்த இரு கணக்கிலிருந்து 34 வங்கி கணக்குகளுக்கு பணம் உடனடியாக மாற்றப்பட்டது. நிரந்தர வைப்புத்தொகை திடீரென மாற்றப்படுவதை அறிந்த துறைமுக அதிகாரிகள் வங்கியை தொடர்பு கொண்டபோதுதான் இந்த மோசடி தெரியவந்தது.

வங்கி அதிகாரிகள் பணபரிவர்த்தனையை நிறுத்துவதற்குள் 45 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுவிட்டது. இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, தமிழ்நாட்டில் 15 இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது, மோசடி பணத்தைக் கொண்டு 230 ஏக்கர் நிலம், பல அடுக்குமாடி குடியிருப்புகள், வாகனங்கள் வாங்கியதோடு தங்கம் மற்றும் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக பி.வி.சுடலைமுத்து, விஜய் ஹெரால்டு உள்ளிட்ட 11 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.