குற்றம்

''நாங்க சைபர்கிரைம்ல இருந்து பேசுறோம்'' - ஆபாச படம் பார்த்த மாணவனிடம் பண மோசடி

PT WEB

செல்போனில் ஆபாச படம் பார்க்கும் நபர்களின் செல்போன் நம்பரை ஹேக் செய்து அவர்களிடம் சைபர் கிரைம் போலீசார்போல் பேசி பண மோசடி செய்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர், தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளார். அந்த மாணவரை செல்போனில் அழைத்து சைபர் கிரைம் போலீசார் என அறிமுகப்படுத்திக்கொண்ட நபர், சட்டவிரோதமாக ஆபாச படம் பார்த்தது குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமெனில், தான் சொல்லும் கூகுள் பே நம்பருக்கு 20 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்புமாறு மிரட்டியுள்ளர்.

இதனால் அச்சம் அடைந்த அந்த மாணவர், தன் தந்தையிடம் வேறு காரணங்களைக் கூறி 20 ஆயிரம் ரூபாய் பெற்று அனுப்பி உள்ளார். பின்னர், இதுகுறித்து கேள்விப்பட்ட அந்த மாணவரின் சித்தப்பா, புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசாரிடம் விபரம் கேட்டுள்ளார்.

அப்போதுதான், அந்த பள்ளி மாணவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. உடனே அவர், அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் மாணவனை அழைத்துப் பேசியவர்களது செல்போன் மற்றும் கூகுள் பே எண்களைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன், பிரகாஷ் ஆகிய இரு இளைஞர்களும் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களைக் கைது செய்து விசாரித்ததில், பலரிடமும் மோசடியில் ஈடுபட்டது தெரியவரவே, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.