குற்றம்

தோஷம் கழிப்பதாக சாமியார் வேசம்போட்டு பண மோசடி: இருவர் சிக்கினர்..!

தோஷம் கழிப்பதாக சாமியார் வேசம்போட்டு பண மோசடி: இருவர் சிக்கினர்..!

Rasus

தோஷம் கழிப்பதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட 2 போலி சாமியாரை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கம் சாய்நகர் 8-வது தெருவில் வசிக்கும் வயதான தம்பதி ரகுராஜன்- மங்கலம். இவர்களின் ஒரேயொரு பெண் குழந்தை மட்டும் இவர்களோடு வசிக்கும் நிலையில் மருமகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 15ம் தேதி இவர்களின் வீட்டிற்கு சாமியார் உடையில் வந்த இரண்டு பேர் ரகுராஜன்- மங்கலம் தம்பதியினரிடம் பேச்சு கொடுத்து அவர்களை பற்றிய விவரங்களை தெரிந்திருக்கின்றனர். தம்பதியினரும் தங்கள் கவலைகள் சொல்ல, உங்களுக்கு தோஷம் இருக்கிறது. எனவே அதனை கழிக்க வேண்டும் என அந்தப் போலி சாமியார்கள் இருவரும் கூறியிருக்கின்றனர். இதற்காக 95,000 ரூபாய் செலவாகும் என தெரிவித்த அவர்கள் அதற்காக 5,000 ரூபாயை முன்பணமாக பெற்றுக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். இதுகுறித்து ரகுராஜன் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் போலி சாமியார்கள் காரில் வந்து சென்றது தெரியவந்தது. காரின் நம்பரை வைத்து விசாரணை மேற்கொண்டதில் திருவண்ணாமலையை சேர்ந்த பிரகாஷ், ராஜேந்திரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, “திருவண்ணாமலையே சேர்ந்த பிரகாஷ், ராஜேந்திரன், கருணாநிதி, முருகன் ஆகிய 4 பேர் நண்பர்களாக இருந்துள்ளனர். இதில் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கே சாமியார் ஒருவர் மக்களுக்கு ஆசி வழங்கி பணம் சம்பாதிப்பதை கண்டிருக்கிறார் பிரகாஷ். இதனையடுத்து தாங்களும் அப்படி சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் போலி சாமியார்களாக மோசடியில் அவர்கள் ஈடுபட்டிருகின்றனர்.  இதில் கருணாநிதி மற்றும் முருகன் தலைமறைவாகியுள்ளார். போலி சாமியார்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என்றனர். தலைமறைவான இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிடிபட்ட இரண்டு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.