குற்றம்

’ஆத்தாடி எம்புட்டு பணம்’.. மொபைல் கேமிங் செயலி மூலம் பண மோசடி. ரூ.17 கோடி வரை பறிமுதல்!

நிவேதா ஜெகராஜா

கொல்கத்தாவில் இ நகெட்ஸ் என்ற செல்போன் விளையாட்டு செயலியின் உரிமையாளருக்கு தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சுமார் 17 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

செல்போன் விளையாட்டு செயலி மூலம் பணமோசடியில் ஈடுபட்டதாக தொழிலதிபர் அமீர்கான் என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் அவர்மீது விசாரணை மேற்கொண்டுனர்.

அந்த விசாரணையின் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் 6 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், 17 கோடியே 10 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்காக பணத்தை எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணிகள் நடைபெற்றன.

இந்த செயலியின் உரிமையாளருக்கும் அரசியல் பிரபலங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபருக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இருப்பினும் மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி தொழில் முனைவோரை மேற்குவங்கத்தை விட்டு விரட்ட முயற்சி நடப்பதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக, நேர்மையற்ற தொழிலதிபர்களுக்கு எதிராக மட்டுமே சோதனை நடைபெறுவதாக கூறியுள்ளது.