குற்றம்

பிரபல ஹரியானா பாடகி மாயம்: 12 நாட்களுக்கு பிறகு சடலமாக உடல் மீட்பு - நடந்தது என்ன?

JustinDurai

காணாமல்போன பாடகி சங்கீதாவை 12 நாட்களாக போலீசார் தேடிவந்த நிலையில், புதைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவர் அரியான்வி மொழிப் பாடகியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், டெல்லியில் வசித்து வந்த சங்கீதாவை காணவில்லை என்று கடந்த 11ஆம் தேதி அவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்கீதாவை 12 நாட்களாக தேடி வந்தனர்.

இந்நிலையில், ஹரியானா மாநிலம் பைனி பைரன் கிராமத்தில் ஒரு பெண்ணின் உடல் புதைக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சடலமாக மீட்கப்பட்ட அந்த பெண்ணின் உடல்தான் சங்கீதா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கொலை மற்றும் ஆள் கடத்தல் தொடர்பான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹரியானாவை சேர்ந்த ரவி மற்றும் ரோகித் என்ற இருவரை கைது செய்தனர். இசை வீடியோ எடுப்பதாக சங்கீதாவை வரவழைத்து அவரை திட்டமிட்டு கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

சங்கீதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு இந்த வழக்கு டெல்லி காவல்துறைக்கு மாற்றப்படும் என்றும் சங்கீதாவை கழுத்தை நெரித்துக் கொன்றது தெரிய வந்துள்ளது எனவும் ஹரியானா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக ரோகித்துடன் சங்கீதா உணவு அருந்திய ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

இதையும் படிக்கலாம்: திருப்பூர்: இரு குழந்தைகளுடன் தாயும் அடித்துக்கொலை; கொலையாளியை தேடும் போலீஸ்