குற்றம்

மனநலம் பாதித்த சிறுமி பாலியல் வன்கொடுமை - பாதிரியார் மீது வழக்குப்பதியக்கோரி ஆர்ப்பாட்டம்

kaleelrahman

ராஜபாளையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் மீது மாற்றுத்திறனாளி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மலையடிப்பட்டியில் செயல்படும் தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்த ஜோசப் ராஜா என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அவர் மீது மாற்றுத் திறனாளி சட்டப் பிரிவு 92ன் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

பஞ்சு மார்க்கெட் நேரு சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

பாலியல் வன்கொடுமை செய்த ஜோசப் ராஜா மீது மாற்றுத் திறனாளிகள் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

மேலும் வன்கொடுமை குறித்து காவல் துறையில் புகார் அளித்த சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டும் குற்றவாளியின் தந்தை ஜோசப் செல்லப்பா, வழக்குப் பதிவு செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபடும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாதர் சங்க தலைவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுவதாகவும் போராட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டது.

எனவே குற்றவாளியின் குடும்பத்தினரை கைது செய்து, விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் லட்சுமி புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.