குற்றம்

“என் மீது வழக்குகள் போட்டு தற்கொலைக்கு தூண்டுகின்றனர்”- நீதிபதியிடம் கதறிய மீரா மிதுன்

நிவேதா ஜெகராஜா
கைதான 2 வழக்குகளில் நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம். தற்கொலைக்கு தூண்டும் வகையில் செயல்படுவதாக நடிகை மீரா மிதுன் எழும்பூர் நீதிமன்றத்தில் கதறி முறையிட்டார்.
பட்டியல் இன மக்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை மீரா மிதுனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து மீரா மிதுன் மீது சென்னை காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜோ மைக்கேல் என்பவரை தாக்க திட்டமிட்ட வழக்கிலும், கடந்த 2019 ஆம் ஆண்டில் நட்சத்திர விடுதியில் மேலாளரை மிரட்டிய விவகாரத்திலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த 2 வழக்குகளிலும் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததையடுத்து இன்று சட்ட விதிப்படி கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் புழல் சிறையில் இருக்கும் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சென்னை எழும்பூர் 14 வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீராமிதுன் மாஜிஸ்திரேட் முன் கதறி முறையிட்டார். காவல் துறையினர் தன் மீது வழக்குகள் போட்டு தற்கொலைக்கு தூண்டுவதாக நீதிபதி முன்பு முறையிட்டுள்ளார். எழும்பூர் காவல்துறையினர் இந்த வழக்குகள் குறித்து முறையாக தகவல் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார். 
இதையடுத்து நடிகை மீரா மிதுன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எழும்பூர் காவல்நிலையத்தில் போடப்பட்ட இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விசாரணைக்காக வருகிற 14-ம்தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அடுத்து போலீசார் நடிகை மீரா மிதுனை சிறையில் அடைக்க மீண்டும் அழைத்து சென்றனர்.