குற்றம்

சிறுமியை காதலிப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டல்: எம்பிஏ பட்டதாரி போக்சோவில் கைது

kaleelrahman

சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஆபாச புகைப்படம் எடுத்து பணம் பறித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சின்னசேலம் எலவடை பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். எம்.பி.ஏ. பட்டதாரி இளைஞரான இவர், சேலம் குகை பகுதியைச் சேர்ந்த உறவுக்கார 15 வயது சிறுமியை ஒரு விசேஷத்தில் சந்தித்து காதல் வலை விரித்துள்ளார். இந்நிலையில், சூழ்நிலை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இளைஞர் சசிகுமார் அந்த சிறுமியை தன்வசப்படுத்தி சில ஆபாச படங்களையும் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து ஆபாச படங்களை வைத்து அந்த சிறுமியிடம் ரூபாய் ஓரு லட்சத்து 80 ஆயிரம் பணத்தை பறித்துள்ளார். இதைத் தொடர்ந்து குடும்பத்தினருக்கு இந்த தகவல் தெரியவந்ததை அடுத்து அவர்களுக்குள்ளாகவே பஞ்சாயத்து பேசி பணத்தை மீட்டுள்ளனர். ஆனால், அதோடு நில்லாத சசிகுமார் சிறுமியை ரகசியமாக சந்தித்து ஒரு செல்போனை கையில் கொடுத்துச் சென்றுள்ளார்.

அந்த செல்போனில் சிறுமியை தொடர்புகொண்ட சசிகுமார், அந்த சிறுமியின் அந்தரங்க படங்களை அனுப்பி அதை வெளியிடாமல் இருக்க அவசரமாக 48 ஆயிரம் ரூபாய் கொடுக்கவேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. விஷயம் விஸ்வரூபம் எடுக்கி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் சசிகுமாரை கைதுசெய்த போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

எம்பிஏ பட்டதாரியான சசிகுமார் பொருளாதார ரீதியாக பின்தங்கிய போதிலும் விலை உயர்ந்த செல்போன் சொந்தமாக கார் லேப்டாப் என ஆடம்பரமாக இருந்துள்ளது தெரியவந்தது. ஐஏஎஸ் தேர்வு எழுதி கலெக்டராக வேண்டும் என்பதே லட்சியம் என்று பலரிடம் கூறி வந்துள்ளதாகவும் ஆனால் சசிகுமாரின் நடவடிக்கைகள் அதற்கு மாற்றாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சசிகுமாரிடம் இருந்த செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சசிகுமார் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். வருவாய் ஏதும் இல்லாத நிலையிலேயே ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த சசிகுமார் மேலும் பல பெண்களிடம் இது போன்று பணம் பறித்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறுகின்றனர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர்.

நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த சசிகுமாரை, நீதிமன்ற அனுமதி பெற்று காவல்துறையினர் விசாரித்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.