3 பேர் கைது pt desk
குற்றம்

மன்னார்குடி | மூதாட்டியை தாக்கி செயினை பறித்துச் சென்றதாக, மருமகள், பேரன் உட்பட 3 பேர் கைது

மன்னார்குடி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் செயின் பறித்த, மருமகள், பேரன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடுப் போன 7 பவுன் தங்கச் செயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: விஜயகுமார்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் - சிந்தியா (65) தம்பதியர். இவருக்கு சாந்தகுமார், விஜய் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், சிந்தியா வீட்டின் அருகே, மூத்த மகன் சாந்தகுமாரின் குடும்பமும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 9ம் தேதி இரவு சிந்தியா தனது வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், சிந்தியாவின் கழுத்தை நெரித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர். இது தொடர்பாக சிந்தியா கொடுத்த புகாரின் பேரில் விசாரித்த பரவாக்கோட்டை போலீஸார், விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவரது மருமகள் அருட்செல்வி (40), பேரன் அருண்குமார் (19), அருட்செல்வியின் தந்தை அய்யாதுரை (65) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, சிந்தியா அணிந்திருந்த 7 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மூவரையும் கைது செய்த பரவாக்கோட்டை போலீஸார், அவர்களிடமிருந்து 7 பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.