சென்னை அயனாவரம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 14 வயது சிறுமியை திருத்தணி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கார்பென்டரை ஆந்திரா மாநிலத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருத்தணி அழைத்துச் சென்று அறையில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக புகாரளிக்கப்பட்டது. இதில் வெங்கடேசன் என்ற கார்பன்டர் மீது தலைமை செயலக காலனி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் திருத்தணி ரயில் நிலையத்தில் தனியாக இருந்த சிறுமியை ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்தனர். காவல்துறை விசாரணையில் வெங்கடேசன் என்ற கார்பன்டர் குறித்து தெரியவந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து ரயில்வே காவல்துறையினர் தலைமைச் செயலக காலனி அனைத்து மகளிர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மகளிர் காவல் துறையினர் திருத்தணியில் சிறுமியை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு ஆந்திராவில் பல்வேறு இடங்களில் தனிப்படையினர் வெங்கடேசனை தேடிவந்த நிலையில் ரேணிகுண்டா பகுதியில் கைது செய்தனர்.