மனைவியை பெங்களூருவில் கொலை செய்துவிட்டு விமானம் மூலம் கொல்கத்தா சென்று மாமியாரையும் கொலை செய்த ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு துப்பறியும் த்ரில்லர் கதையை போல ஒரு கொலை சம்பவத்தின் பின்னணியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பெங்களூரு நகரத்தில் உள்ள ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சமையலறையில் ஒருவர் சடலமாக இறந்து கிடந்துள்ளார். அதனை அறிந்து அங்கே சென்ற பெங்களூரு மகாதேவ்புரா காவல் நிலைய அதிகாரிகள் இறந்தவரை அடையாளம் அறிந்துள்ளனர். அவரது பெயர் ஷில்பி அகர்வால் என கண்டறிந்துள்ளனர். ஆனால் அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? என்ன நடந்தது என ஒன்றுமே தெரியாமல் தவித்துள்ளனர். இந்தச் சம்பவம் திங்கள் கிழமை நடந்துள்ளது.
இந்நிலையில், இன்று கொல்கத்தாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த ஷில்பி அகர்வாலின் தாய் மர்மமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனையறிந்து அங்கே சென்ற கொல்கத்தா போலீசார் இந்த மரணத்தின் பின்னணியை விசாரித்துள்ளனர். மேலும் இவரது மகள் பெங்களூருவில் வாழ்ந்து வருவதை அறிந்து தகவல் கொடுக்க முயன்றுள்ளனர். அப்போது மகளும் கொள்ளப்பட்ட தகவலை கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆக இந்தக் கொலைக்கும் அவரது தாயாரின் கொலைக்கும் ஏதோ தொடர்பு இருப்பதை அறிந்து விசாரணையில் இறங்கியுள்ளனர் போலீசார். ஷில்பி அகர்வாலின் கணவர் அமித் அகர்வால். 42 வயதான இவர் பட்டய கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக விசாரித்த கொல்கத்தா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் போலீசார், அமித் அகர்வால் முதல் நாள் தனது மனைவியை கொலை செய்துவிட்டு விமானம் மூலம் பயணித்து கொல்கத்தா சென்றுள்ளார் என்றும் அங்கு சென்றவர் அவரது தனது 69 வயது நிரம்பிய மாமியார் லலிதா தாண்டானியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும் அந்தச் சண்டையில் இறுதியில் மாமியாரை சுட்டுக் கொன்றதாகவும் கண்டறிந்துள்ளனர். அதன் பின்னர் அமித் அகர்வால் தானும் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதாவது அமித் அகர்வால் தற்கொலை செய்து கொள்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக மனைவியை கொன்று இருக்கக் கூடும் என்றும் கண்டறிந்துள்ளனர்.
இந்தக் கொலை குறித்து கொல்கத்தா மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேசியுள்ளார். அதில் அவர், “ஷில்பி அகர்வாலின் உடல் சிதைந்த நிலையில் காணப்பட்டதாக பெங்களூரு காவல்துறையினர் எங்களுக்குத் தெரிவித்தனர். அவர்களது அறிக்கையின்படி, ஷில்பி உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே அவர் கொல்லப்பட்டிருக்கலாம்" எனக்கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “அமித் அகர்வால் எழுதியதாகக் கூறப்படும் குறிப்பு அபார்ட்மெண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை கொலை வழக்கு எடுத்துக் கொண்டு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ள” என்று கூறியுள்ளார்.
அகர்வால் தனது மனைவியிடம் இருந்து இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். ஆகவே விவாகரத்து நடவடிக்கைகள் நடந்து வந்துள்ளது. ஷில்பி அகர்வால் பெங்களூரில் வசித்து வந்துள்ளார். அமித் கொல்கத்தாவுக்கு வடக்கே உள்ள உத்தரபாராவில் உள்ள அவரது குடும்ப வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் இவர்களுக்கு 10 வயது மகனும் உள்ளார். மகன் அவரது தாயுடன் வசித்துள்ளார். அந்தச் சிறுவனை அமித் மீண்டும் கொல்கத்தாவுக்கு அழைத்து வந்து மாமாவின் பராமரிப்பில் விட்டுவிட்டுள்ளார். அதே நேரத்தில்தான் அவரது மாமனார் மற்றும் மாமியாரிடம் தகராறு செய்துள்ளார் அமித். அப்போது மாமனார் மட்டும் தப்பிச் சென்றுள்ளார். இவை யாவையும் போலீஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளனர்.
அத்துடன், தன்னுடைய மனைவியை கொல்வதற்காக அவர் பல வழிகளையும் முயற்சித்துள்ளார் என்பதையும் தன்னுடைய டைரியில் குறிப்பிட்டுள்ளார். 67 பக்கங்கள் கொண்ட அந்த குறிப்பில் 66 பக்கங்கள் டைப் செய்யப்பட்டுள்ளது. முதல் பக்கத்தில் எனது வாழ்க்கையின் மகாபாரதம் என்று தலைப்பிட்டுள்ளார். பாம்பு கடிக்க வைத்தும், கூலிப்படையை வைத்தும், கார் விபத்து மூலமும் தன்னுடைய மனைவியை கொலை செய்ய முயற்சித்ததாக குறிப்பிட்டுள்ளார். இறுதியாக யாரையும் நம்பாக தானே மனைவியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.