குற்றம்

உ.பி: ஓர் ஆண்டுக்கு முன்பு முத்தலாக் கொடுத்த மனைவி, அவரது தாயை சுட்டுக் கொன்ற நபர்!

Sinekadhara

உத்தர பிரதேசத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பு முத்தலாக் கொடுத்த மனைவி மற்றும் அவரது தாயாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் சாஹரன்பூரைச் சேர்ந்தவர் ருக்சானா. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த மொஹ்சின் என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த ஆண்டு மொஹ்சின் தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்துள்ளார். இதனால் ருக்சானா தனது கணவர் மீது வழக்குத் தொடந்திருந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

முத்தலாக்கிற்கு பிறகு, ருக்சானா சாஹரன்பூரில் உள்ள அலம்புரா கிராமத்திலுள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று இருந்துள்ளார். ஆனால், தன்மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் வாங்குமாறு மொஹ்சின் ருக்சானாவை தொடர்ந்து அச்சுறுத்தி வந்திருக்கிறார். ஆனால் அவர் அதற்கு ஒப்புக் கொடுள்ளாததால் ஆத்திரமடைந்த மொஹ்சின், புதன்கிழமை ருக்சானாவின் வீட்டிற்கு சென்று துப்பாக்கியால் ருக்சானா மற்றும் அவரது தாயாரை இரண்டுமுறை சுட்டுள்ளார். இருவரும் தலா இரு குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விஷயம் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மொஹ்சினை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.