குற்றம்

கோவை: 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை

Sinekadhara

கோவையில் திருமணம் செய்துக்கொள்வதாகக் கூறி 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவைக்கு தனது பாட்டி வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கும், மதுக்கரையைச் சேர்ந்த காஜா உசேன் (31) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி காஜா உசேன் அந்த சிறுமியிடம் பழகி, சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கிடையே, சிறுமியை காணவில்லை எனக்கூறி, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர், சிறுமியை மீட்டு, சிறுமியை அழைத்து சென்ற காக உசேனையும் கைது செய்தனர்.

விசாரணையில் சிறுமியை காஜா உசேன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காஜா உசேனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.