சென்னை அடுத்துள்ள மதுரவாயலில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்துள்ள மதுரவாயலில் கெங்கையம்மன் கோயில் தெரு, ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் சங்கர். நேற்று இரவு சங்கர் மதுரவாயல் ராஜூவ்காந்தி நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சங்கரை வழிமறித்து தலையில் சரமாரியாக வெட்டினார்கள். இதில் சங்கர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்துபோன சங்கரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பல்சர் சதீஷ் என்பருக்கும் சங்கருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக பல்சர் சதீசின் முகத்தில் சங்கர் கத்தியால் குத்தினார். இதில் சதீஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் சங்கரை பழிதீர்க்க சதீஷ் முடிவு செய்து நேற்று இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுரவாயல் லஷ்மி நகரில் நடந்து சென்ற சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. எனவே தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.