வரதட்சணை கேட்டு வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்ட பெண்ணையும், அவரது இரு குழந்தைகளையும் போலீசார் மீட்டனர்
தூத்துக்குடி அருகேயுள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. இவர் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து, கணவரின் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கார்த்திகேயன் ஐடி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பரமேஸ்வரியை அவரது கணவரின் குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
கார்த்திகேயனும் அவரது பெற்றோரும் பரமேஸ்வரியை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்தும் கொடுமை செய்துள்ளனர். ஆனால் இது குறித்து பரமேஸ்வரி யாரிடமும் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் பிறந்தவீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணை வாங்கிவர வேண்டுமென்றும், இல்லையென்றால் குழந்தைகளை கொலை செய்துவிடுவதாகவும் பரமேஸ்வரியை மிரட்டியுள்ளனர். இது குறித்து பரமேஸ்வரி தனது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கவே, அதிர்ந்து போன பரமேஸ்வரியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
புகாரை ஏற்ற செங்கல்பட்டு போலீசார் உடனடியாக பரமேஸ்வரியையும் அவரது குழந்தைகளையும் மீட்டனர். வரதட்சணை புகாரின் அடிப்படையில் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான கார்த்திகேயனின் பெற்றோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.