காதலன் கண்முன்னே காதலியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கொள்ளையர்களை காதலனே கொலை செய்த சம்பவம் ஆத்தூரில் நடைபெற்றுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது வடசென்னி மலை பாலசுப்பிரமணியர் கோவில். இதன் மலை அடிவாரத்தில் கடந்த 14ம் தேதி அப்பகுதியை சேர்ந்த ரவுடி கார்த்திகேயன் சடலமாக மீட்கப்பட்டார். அவரை யார் கொலை செய்தனர்..? எதற்காக இந்தக் கொலை நடந்தது என்ற கோணத்தில் போலீசார் தங்களது விசாரணையை முடக்கிவிட்டனர். மலையடிவாரத்தில் ரத்த கறை படிந்த துப்பட்டா, கத்தி உள்ளிட்ட பொருட்கள் கிடந்தன. அதனை கைப்பற்றிய போலீசார் அதுகுறித்தும் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர். தலைவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் அதே கல்லூரியில் படிக்கும் தனது காதலியுடன் வடசென்னி மலைக்கு சென்றிருக்கின்றார். அங்கு மலையடி வாரத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த ரவுடி கார்த்திகேயன் தனது நண்பருடன் அங்கு வந்திருக்கிறார். காதல் ஜோடியை பார்த்த கார்த்திகேயன் அவர்களிடம் இருந்த நகை பணம் உள்ளிட்ட பொருட்களை பிடுங்கியிருக்கிறார். போதையில் இருந்ததால் மாணவியை அடைய ஆசைக் கொண்ட கார்த்திகேயன் காதலர் முன்னே அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். தன் கண் முன்னே காதலிக்கு கொடுமை நேர்வதை கண்ட அந்த மாணவர், ரவுடி வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரையே குத்தி கொலை செய்துள்ளார். போலீசார் விசாரணையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. கார்த்திகேயனுடன் வந்த மற்றொரு ரவுடி தப்பி ஓடிவிட்டார். அவரை பிடித்து விசாரித்ததில், வடசென்னி மலைக்கு வரும் பலரிடம் இதுபோன்று கொள்ளை சம்பவத்தில் அந்தக் கும்பல் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கார்த்திகேயன் உள்பட மொத்தம் 4 பேர் இந்த குற்றச்செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருகின்றனர். இந்தக் கும்பல் மொத்தமாக 100 சவரனுக்கும் மேலாக கொள்ளையடித்துள்ளதாக தெரிகிறது. பொதுவாக பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து புகார் அளிக்காமல் இருந்ததால் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வராமல் இருந்த நிலையில் தற்போது ரவுடி கொலை செய்யப்பட்டதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கொலை செய்த கல்லூரி மாணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.