குற்றம்

ரூ.2000க்கு 'திருட்டு' பைக்; மது போதைக்காக பைக்குகளை திருடி விற்ற நபர்!

ரூ.2000க்கு 'திருட்டு' பைக்; மது போதைக்காக பைக்குகளை திருடி விற்ற நபர்!

webteam

சென்னையில் மதுபோதைக்கா‌க இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையின் சைதாப்பேட்டை, கிண்டி, மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் வாசலில் நிறுத்தப்படும் வாகனங்கள் திருடு போவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை காவல்துறையினர், சைதாப்பேட்டை ரயில்நிலையம் அருகே புருஷோத்தமன் என்பவரை மடக்கி பிடித்தனர்.‌

விசாரணையில் அவர் லாரி ஓட்டுநராக இருந்ததும், தற்போது கடந்த ஓராண்டாக வேலைக்குச் செல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. வருமானம் இல்லாததால் மது அருந்தவும் பணம் இல்லை என்பதால் திருட்டில் ஈடுபட்டதாக புருஷோத்தமன் கூறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருடிய வாகனங்களை டாஸ்மாக் கடைகளுக்கு வருவோரிடம் ஆயிரம் முதல்‌ இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்று வந்ததும் தெரிய வந்துள்ளது. பின்னர் 14 இரு சக்கரவாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.