விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி சாலையில் உள்ள கோயில் அருகே காயங்களுடன் இருந்த சடலத்தை கைப்பற்றிய போலீஸார் அதனை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சடலத்தின் அருகில் ரத்தக் கறை படிந்த கல் ஒன்று இருந்ததால், அவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப் பட்டார். இறந்தவர் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள மாயூரநாதர் சுவாமி கோயில் அருகே இன்று காலை ரத்தக் காயங்களுடன் ஒருவர் சடமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்தில் சென்று பார்த்தபோது காவி வேட்டி அணிந்த ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
அவரது அருகில் சட்டை ஒன்றும், ரத்தக்கறை படிந்த கல் ஒன்றும் கிடந்தது. அந்த கல்லால் தாக்கி அவர் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் அருகே மது அருந்த பயன்படுத்தும் தண்ணீர் பாக்கெட் ஒன்றும் கிடந்தது. இறந்தவரை அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோதும் அவர் யார் என இதுவரை தகவல் தெரியவில்லை.
பணத்திற்காக கொலை நடந்ததா அல்லது மது அருந்தும்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.