குற்றம்

தகாத உறவு என சந்தேகம்: சிறுநீரை குடிக்க வைத்து கொடுமை செய்த பஞ்சாயத்து!

தகாத உறவு என சந்தேகம்: சிறுநீரை குடிக்க வைத்து கொடுமை செய்த பஞ்சாயத்து!

webteam

உள்ளூர் பெண்ணுடன் தகாத உறவு வைத்திருப்பதாகச் சந்தேகப்பட்டு, சிறுநீரை குடிக்க வைத்த இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூர் அருகில் உள்ளது இந்திரா காலனி. இந்தப் பகுதியை சேர்ந்தவர் அருண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் அந்த ஊரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் தகாத உறவு இருப்பதாக, உள்ளூர்க்காரர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் திடீரென கூடிய பஞ்சாயத்து அருணை அங்கு அழைத்தது. தகாத உறவு விவகாரம் பற்றிக் கேட்கப்பட்டது. ‘நீங்கள் சொல்கிற பெண் யாரென்றே தெரியாது’ என்று கூறியுள்ளார் அருண். அதில் திருப்தியில்லாத பஞ்சாயத்து, பொய் சொல்வதாக இளைஞரை அடித்து துவைத்தது. பிறகு சிறுநீரை குடிக்க வைத்துத் துன்புறுத்தியுள்ளது. இதனால் அவமானமடைந்த அருண், தற்கொலை செய்துகொள்ள முயன்றார். ஆனால், அருகில் இருந்தவர்கள், அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது சிகிச்சை பெற்றுவரும் அருண் கூறும்போது, ’ஒரு பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு அவருடன் தகாத உறவு வைத்திருக்கிறாய் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன பெண், யாரென்றே தெரியாது என்பதால், இல்லை என்றேன். அவர்கள் அதை நம்பாமல் என்னை சிறுநீரை குடிக்க வைத்து அடித்து உதைத்தனர். எனக்கு பயமாக இருக்கிறது. என்னை அவர்கள் கொன்றுவிடுவார்கள். போலீஸ் உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.