சென்னையில் திருமண ஆசைக்காட்டி 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை அடையார் காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் தாயார் கண்ணகிநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் விசாரணை செய்ததில் மேற்படி 17 வயது சிறுமியை அதேபகுதியில் வசித்துவரும் சுதாகர் என்பவர் காதலித்து வந்ததும், திருமண ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
சிறுமியை கடத்திச்சென்ற சுதாகர் என்பவரை காவல்துறையினர் நேற்று பிடித்து காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை செய்தனர். விசாரணையில் சுதாகர் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதும், திண்டிவனத்தில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கு கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. போக்சோ சட்டப்பிரிவில் சுதாகரை கைதுசெய்த கிண்டி அனைத்து மகளிர் காவல்துறையினர், சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட சுதாகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.