குற்றம்

ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

Sinekadhara

மயிலாடுதுறை அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்து கடத்திச் சென்றவரை போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தின் கீழ் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிளஸ் 2 படிக்கும் மாணவி கடந்த 4ஆம் தேதி ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்கு இ சேவை மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிறுமியை செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் சின்னப்பன் மகன் ராமச்சந்திரன் 21 என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் சிறுதாவூர் சென்று சிறுமியை மீட்டதுடன் ராமச்சந்திரனை பிடித்துவந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராமச்சந்திரனுக்கு சிறுமிக்கும் இடையே ஹலோ சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த மாதம் இருவரும் மயிலாடுதுறையில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் சிறுமியை வீட்டிற்கு அனுப்பிவிட்டு ராமச்சந்திரன் சிறுதாவூர் சென்றுவிட்டது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமியை ராமச்சந்திரன் தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்துள்ளனர்.