குழந்தையைக் கடத்த முயன்றதாக ஒருவரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை பின்புறம் உள்ள பகுதியில் நாடோடிகளாக தங்கி ஸ்டவ் பழுது பார்க்கும் வேலை செய்து வருபவர்கள் சுந்தர், பாண்டி. இவர்கள் இன்று மதிய உணவு அருந்துவதற்காக திருவல்லிக்கேணி ரயில் நிலையம் அருகில் உள்ள பிளாட்பாரத்தில் சாப்பாடுக் கடை வைத்திருக்கும் பட்டம்மா என்பவரின் கடைக்கு சென்றிருக்கின்றனர். அப்போது அவர்களின் குழந்தைகளான ஜோசப்(வயது 7) மற்றும் பவித்ரா (1.5 வயது) அருகில் நின்று விளையாடிக் கொண்டிருந்தனர். ஜோசப் குழந்தை பவித்ராவை கையில் தூக்கி வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அந்த வழியாக குடிபோதையில் சென்ற வேலு என்பவர் சிறுவன் ஜோசப்பிடம், ‘உன் கையில் இருக்கும் குழந்தை என் குழந்தை. அதை என்னிடம் கொடு’ எனக் கேட்டிருக்கிறார். ஆனால் ஜோசப் குழந்தையை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளான். இதனையடுத்து சிறுவன் ஜோசப்பை கன்னத்தில் அறைந்ததோடு குழந்தை பவித்ராவை பிடுங்கிக் கொண்டு திருவல்லிக்கேணி ரயில் நிலையம் நோக்கி நடந்து சென்றார் அந்த இளைஞர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த ஜோசப் வேகமாக சத்தம் போட்டான். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வேலுவை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.