மூன்றாவதும் பெண் குழந்தையாகப் பிறந்ததால், சிசுவை மருத்துவமனையிலேயே கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் ஈத்தவிளை பகுதியைச் சேர்ந்த ராபின்சன் மனைவி மேரிபியர்லி, பிரசவத்துக்காக குளச்சல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்தது. ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 3-வதும் பெண் குழந்தையாகப் பிறந்ததில் ராபின்சன் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனையின் தனி அறையில் இருந்த குழந்தையின் வாயிலும், மூக்கிலும் கைக்குட்டையால் அழுத்தி ராபின்சன் கொலை செய்ய முயன்றாராம். அதைப் பார்த்த செவிலியர் கூச்சலிட்டதால், மருத்துவமனை ஊழியர்கள் ராபின்சனிடம் இருந்து குழந்தையை மீட்டுள்ளனர். கொலை முயற்சியால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையொட்டி குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். தகவலறிந்த குளச்சல் போலீஸார், ராபின்சனை கைது செய்து, சிறையிலடைத்தனர்.