குற்றம்

குப்பைகளை சேகரிப்பது போல் நடித்து பஞ்சலோக விநாயகர் சிலையை திருடிய வடமாநில இளைஞர்கள்!

webteam

ஓசூர் அருகே குப்பை சேகரிப்பவர்கள் போல் கோவிலில் இருந்த பஞ்சலோக விநாயகர் சிலையை திருடிய வட மாநிலத்தவர்களை சிசிடிவி ஆதாரங்களை கொண்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்திருப்பதால் வட மாநிலத்தவர்களும் அதிக அளவில் அங்கு வசிக்கின்றனர். இந்நிலையில், ஓசூரை அடுத்த சூளகிரி கேகே.நகர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலை ராதா (58) என்பவர் பராமரித்து வருகிறார்.

கடந்த 26 ஆம் தேதி நண்பகல் நேரத்தில் இவர் விநாயகர் கோவிலுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது கோவிலில் இருந்த 21 கிலோ எடையிலான பஞ்சலோக விநாயகர் சிலை திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார், அருகே இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் குப்பைகளை சேகரிக்க வரும் வடமாநில இளைஞர்கள் சிலர், கோவில் பகுதியிலிருந்து பிளாஸ்டிக் பையுடன் வெளியே செல்வது பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சூளகிரி குடியிருப்பு பகுதிகளில் குப்பை சேகரித்து வந்த இருவரை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிலையை வடமாநில இளைஞர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டத்தைச் சேர்ந்த கையும் (20), நையம் (22) ஆகியயோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் வேறு ஏதேனும் பகுதியில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 21 கிலோ எடைக்கொண்ட பஞ்சலோக விநாயகர் சிலையை போலீசார் மீட்டுள்ளனர்.