சென்னையின் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி விற்று வந்த ஓய்வு பெற்ற நீதிபதியின் பேரனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிசிடிவி காட்சிகளின் உதவியால், இவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆர்.கே நகர் 1வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் வசந்தகுமார். இவர் கடந்த 14ம் தேதி காலை தனது சைக்கிளை வீட்டிற்கு வெளியில் நிறுத்திவிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது விலை உயர்ந்த சைக்கிளை யாரோ திருடிச் சென்றுள்ளதை அறிந்துள்ளார். உடனடியாக இது குறித்து வசந்தகுமார் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது சுமார் 40 வயதுடைய நபரொருவர் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடும் காட்சி பதிவாகி இருந்ததை அவர் அறிந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக அந்த நபர் செல்லும் வழி முழுவதுமாக இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வந்தனர். அப்போது அந்நபர், ஆயிரம் விளக்கு பகுதியில் அவர் சைக்கிளை கொண்டு போய் வைப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த நபரை அங்கே வைத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். விசாரணையில், சைக்கிளை திருடியவர் சூளை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பது தெரிந்தது. பின்னர் அவரிடமிருந்து 5 விலையுயர்ந்த சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட சரவணன் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி பட்டப்படிப்பு முடித்துள்ளதும் தெரியவந்தது. கைதான சரவணனின் தாத்தா ஓய்வு பெற்ற நீதிபதி என்பதும், தனக்கு பெற்றோர் யாரும் இல்லாத காரணத்தினால் இதுபோன்று சைக்கிள்களை அவர் திருடி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இபப்டி சைக்கிள் திருடி விற்பதன்மூலம், தனக்கு நல்ல வருமானம் கிடைத்ததால் இதனை அவர் செய்து வந்ததாக சரவணன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைதான சரவணன் ராயப்பேட்டை, மயிலாப்பூர், பட்டினம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் விலையுயர்ந்த சைக்கிள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சரவணன் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.