குற்றம்

`வாட்ஸ்அப்-பில் ஆர்டர் எடுத்து கஞ்சா டோர் டெலிவரி'- அதிமுக அம்மா பேரவை செயலாளர் கைது

webteam

ஆத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்களை டோர் டெலிவரியாக வீட்டு வாசலுக்கே சென்று விற்பனை செய்துவந்ததாக நரசிங்கபுரம் 16-வது வார்டு அதிமுக அம்மா பேரவை செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து அரை கிலோ மதிப்பிலான 40 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் கஞ்சா, குட்கா, உள்ளிட்ட போதை பொருட்களுக்கு இளைஞர்கள், மாணவர்கள் அடிமையாகி வரும் ஆபத்தான போக்கு நிலவிவருகின்றது. இதை தடுக்கவும், அடிமையானவர்களை மீட்கவும் போதைப் பொருட்கள் விற்பனையை தமிழகத்தில் தடுக்க காவல்துறை தரப்பில் `ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவுக்கு புகார் கிடைத்திருக்கிறது.

அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்துள்ளனர். அப்போது ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனம் மூலம் வாலிபர் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை டோர் டெலிவரி செய்து கொண்டிருந்த போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். அவரை பிடித்த போலீசார், காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் இவர் நரசிங்கபுரம் நகராட்சி 16 வது வார்டு அதிமுக அம்மா பேரவை செயலாளர் ரமேஷ் என்பதும், இவர் வாட்ஸ்-அப் மூலம் கஞ்சா பொட்டலங்களை ஆர்டர் எடுத்து, ஆர்டர் கொடுக்கும் நபர்களுக்கு பதிவெண் இல்லாத இருசக்கர வாகனம் மூலம் கஞ்சாவை டோர் டெலிவரி செய்து வந்ததும் தெரியவந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரமேஷை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து அரை கிலோ மதிப்பிலான 40 கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.