குற்றம்

தனக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைப்பதை தட்டிக்கேட்டவருக்கு உருட்டுக்கட்டையால் அடி

Sinekadhara

உளுந்தூர்பேட்டை அருகே கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில், சாலை அமைக்க முயன்றபோது தடுத்து நிறுத்தியதால் ஒரு பெண் உள்பட 4 பேரை உருட்டுக்கட்டையால் தாக்கிய 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த அயன்வேலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஒப்பந்ததாரர்கள் சாலை போடுவதற்கான வேலையில் ஈடுபட்டபோது, இதனைத் தடுத்து நிறுத்திய கண்ணன் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றத்தில் விசாரணை முடிவில் கண்ணனுக்கு நஷ்டஈடு வழங்கியும் வேறு இடத்தில் பட்டா மாற்றி தரவேண்டுமென நீதிபதி தீர்ப்பளித்தார். 

இந்நிலையில் ஐந்து தினங்களுக்கு முன்பு மீண்டும் அதிமுக ஒப்பந்ததாரர்கள் இழப்பீடு மற்றும் வேறு இடத்தில் பட்டா வழங்காமல் சாலை போடுவதற்கான பணிகளை அந்த இடத்தில் தொடங்கினர். இதனை மறித்து எதிர்த்து கேட்டதன் விளைவாக ஒப்பந்ததாரருக்கும் கண்ணனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதில் கண்ணனை ஒப்பந்ததாரர் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் திருநாவலூர் காவல் நிலையத்தில் ஒப்பந்ததாரர் மீது கண்ணன் புகார் அளித்துள்ளார். மேலும் நேற்று கண்ணன் மற்றும் அவரது மகன்கள் காவல் நிலையத்துக்குச் சென்று முறையிட்டு வீட்டுக்கு வந்துள்ளனர்.

அப்பொழுது திடீரென அயன் வேலூர் கிராமத்தை சேர்ந்த சிலரும் கோவிந்தராஜ பட்டினத்தைச் சேர்ந்த சிலரும் கண்ணன் அவரது மகன் குமார், பிரபு ராமதாஸ் மற்றும் நதியா, கொளஞ்சி அம்மாள் ஆகியோரை உருட்டுக்கட்டையால் அடித்து தாக்கியுள்ளனர். அதன்பின் வீட்டினுள் புகுந்து வீட்டிலிருந்த இருசக்கர வாகனம், டிவி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு சென்றனர்.

அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த கண்ணன் மற்றும் மனைவி, மருமகள், மகன்கள் அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து  சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்த உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன் இருவரை கைதுசெய்துள்ளார். தலைமறைவான மூவரை தேடி வருகின்றனர்.