குற்றம்

மதுரை: அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை; இருவர் கைது

kaleelrahman

மதுரையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் சட்டவிரோத லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி மற்றும் உத்தாங்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு  ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுரை உத்தங்குடி பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஜெயராமன், சிவகங்கையைச் சேர்ந்த சேவுக பெருமாள் ஆகியோரை பிடித்து விசாரித்ததில் இருவரும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 527 லாட்டரி சீட்டுக்கள் மற்றும் 6000 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து புதூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.