மதுரையில் கடையின் மேலாளரே, கடையில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சம்பக்குளம் கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் பாதுஷா என்பவர், மதுரை அண்ணா நகர் பகுதியில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கடையில் காசிநாதன் என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடையில் வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர், 3 விலையுயர்ந்த ஏசிக்கள் மற்றும் யூ.பி.எஸ், பேட்டரி, ஆம்ப்ளி ஃபையர் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சிக்கந்தர் பாதுஷா அண்ணாநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பூமிநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இதைத் தொடர்ந்து கடையின் மேலாளர் காசிநாதனிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்மீது வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தியதில் கடையிலிருந்து இரவு நேரங்களில் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை எடுத்துச் சென்றதை ஒத்துக்கொண்டார். இதனை தொடர்ந்து காசிநாதனை அண்ணாநகர் காவல் துறையினர் கைது செய்தனர்.