குற்றம்

மதுரை: கட்டுக்கட்டாக பழைய 1000 ரூபாய் நோட்டுகள் - வாகன சோதனையில் சிக்கிய மோசடி கும்பல்

kaleelrahman

மதுரையில் வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கியது. ரூ.62 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 8 பேரை கைது செய்தனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தது. இந்நிலையில் அப்போது மக்கள் அனைவரும் பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்து புதிய ரூபாய் நோட்டை பெற்றுக்கொண்டனர். அதன் பிறகு பழைய ரூ.500, 1000 நோட்டுகள் புழக்கத்தில் இல்லை.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது சதுரங்கவேட்டை சினிமா பாணியில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என மதுரையைச் சேர்ந்த ஒரு கும்பல் பல நபர்களுக்கு ஆசைவார்த்தை கூறி பணத்தை பறித்துவிட்டு தப்பி செல்வது தொடர்கதையாக இருந்தது.

இதையடுத்து மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் இன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு கார்களில் வந்த டிப்டாப் ஆசாமிகள் வங்கிக்கு பணம் செலுத்தப் போவதாக கூறியுள்ளனர். போலீசார் அந்த இரு கார்களையும் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தபோது செல்லாத பழைய 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து இரு கார்களிலும் வந்த காவேரி, கருப்பன், உதயகுமார், அரவிந்தகுமார், சிவன், விஜயகுமார், முத்துமோகன், ராம்குமார் ஆகிய 8 நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.69,39,500 மதிப்பிலான பழைய 1000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய இருகார்களையும் பறிமுதல் செய்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.