தங்கப்பாண்டியன் - அம்மையப்பர்
தங்கப்பாண்டியன் - அம்மையப்பர்  முகநூல்
குற்றம்

”வாரம் ஒருமுறை கையெழுத்திடணும்” விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிள்ளையார்குளம், கங்காகுளம் பகுதியில் சமீபத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதற்கு வந்த ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் என்பவரை பார்த்து அக்கூட்டத்தில் இருந்த அம்மையப்பர் என்ற விவசாயி, “ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை மாவட்ட ஆட்சியர் 4 மாதத்துக்கு முன்பே மாற்றிவிட்டார். அப்படியிருக்க ஏன் மீண்டும் ஊராட்சி செயலர் வந்துள்ளார்?” என கேள்வி எழுப்பினார். இதில் கோபமடைந்த தங்கபாண்டியன் விவசாயி அம்மையப்பரை காலால் எட்டி உதைத்தார்.

விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலர்

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில் அனைத்து தரப்பினரிடமும் அது கடும் கோபத்தையும் கிளப்பியது. இந்நிலையில் இச்சம்பவத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வேண்டுமெனக் கோரி, ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று அது விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தங்கபாண்டியணுக்கு முன்ஜாமீன் தரக்கூடாது. மேலும் இவர் அம்மையப்பரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் தரப்பு மனுவிலும் வாதத்திலும், “இந்த சம்பவத்திற்காக மிகவும் வருந்துகிறேன். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவும் தயாராக இருக்கிறேன்” என தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில் இவருக்கு முன் ஜாமீன் தரக்கூடாது என்று கடும் எதிர்ப்பு முன்வைக்கப்பட்டது. அதில், “தங்கப்பாண்டியன் விவசாயியை தாக்கியதற்கான ஆதாரம் இருக்கிறது. இது சட்ட ஒழுங்கு பிரச்னை. எனவே அவருக்கு முன்ஜாமீன் தரக்கூடாது.” என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இதனையும் மீறி தற்போது இவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, ”தாக்கப்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. எனவே வராத்தில் ஒருநாள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு சென்று கையெழுத்திட வேண்டும்” என்று கூறி நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீனை வழங்கினார்.