செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை விளாங்குடியைச் சேர்ந்த வெள்ளைப்பாண்டி, முரளி மணிகண்டன் ஆகிய இருவரும் இணைந்து ஆன்லைன் டிரேடிங் மூலமாக பணம் இரட்டிப்பு செய்து லாபம் தருவதாகக் கூறி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியைச் சேர்ந்த சசிகுமார், தேவராஜ் ஆகிய இருவரும் வெள்ளைப்பாண்டிக்கு அறிமுகமாகி ஆன்லைன் டிரேடிங் செய்துள்ளனர். இதையடுத்து வெள்ளைப்பாண்டி, முரளி மணிகண்டன் ஆகிய இருவரிடமும் சசிகுமார் தேவராஜ் ஆகியோர் கடந்த இடண்டு மாதத்திற்கு முன்பு ரொக்கமாக 4 லட்சம் ரூபாய் கொடுத்தனர்.
ஆனால், இரண்டு மாதம் கடந்தும் 4 லட்சம் ரூபாய் பணத்தைத் தரமாலும் இரட்டிப்பும் செய்து தரவில்லை. எனவே கொடுத்த பணத்தை சசிககுமார், தேவராஜ் வெள்ளைப்பாண்டியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, பணமெல்லாம் தர முடியாது முடிந்ததை பார்த்துக்கொள் என்று கூறி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார், தேவராஜ், தனது நண்பர்களான விஜய் ,விக்னேஷ், பிரதாப் ஆகிய 5 பேரும் வெள்ளைப்பாண்டி இருக்கும் இடத்திற்கு வந்த போது தகவலறிந்து வெள்ளைப்பாண்டி தப்பி ஓடியுள்ளார்.
இதனால் வெள்ளைப்பாண்டிக்கு பதிலாக அவருடைய தம்பி ரத்னவேல் பாண்டியை விளாங்குடி பகுதியில் வரும்போது காரில் கடத்திச் சென்றனர். பின்பு வெள்ளைப்பாண்டியை, சசிகுமார் தொடர்பு கொண்டு தம்பி உயிரோடு வேண்டுமென்றால் நான் கொடுத்த 4 லட்சம் ரூபாய் பணத்தை தர வேண்டும் இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கூடல் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்டவர்களை விளாங்குடி பகுதியில் காரில் கடத்தி சென்ற போது 5 பேரையும் மடக்கிப் பிடிக்கும் போது சசிகுமார், விஜய், விக்னேஷ் தேவராஜ், ஆகியோரை பிடித்து ரத்னவேல் பாண்டியனை மீட்டனர்
இதில், பிரதாப் தப்பியோடிய நிலையில், தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாநகர் பகுதியில் தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வழக்கறிஞர் ஒருவரும் தொழிலதிபர் ஒருவரும் பணத்திற்காக கடத்தப்பட்ட சம்பவம் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் பணத்திற்காக இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.