குற்றம்

ஆசிட் வீச்சு, விஷ உணவு என தொடர் இன்னலுக்கு உள்ளாகும் மதுரை தெருவோர கால்நடைகள்

நிவேதா ஜெகராஜா

மதுரையில் தெருநாய்கள் உணவில் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. இதற்காக நாய்களின் உடல்களை கால்நடைத்துறை மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.

மதுரையில் விலங்குகளை துன்புறுத்தும் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக மதுரை மாநகர் பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகள் மீது சுடு தண்ணீர் அல்லது ஆசிட் ஊற்றுவது, ஆதரவற்று சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்வது போன்ற கொடூர செயல்கள் சமீபகாலமாக மதுரையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மதுரை கோமதிபுரம் பகுதியில் சாலையில் திரியும் நாய்களுக்கு மர்ம நபர்கள் சிலர் விஷம் கலந்த இறைச்சிகளை உணவாக வழங்கியுள்ளனர். இதனை உண்ட 3 நாய்கள் உயிரிழந்துள்ளன. மேலும் மூன்று நாய்களை விலங்கு நல ஆர்வலர்கள் மீட்டுள்ளனர். அவை மதுரை அரசு கால்நடை மருத்துவமனையில் கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனை காப்பாற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில், “விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட மூன்று நாய்களுக்கும் கால்நடை மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் ஆய்வகத்திற்கு அனுப்பட்ட மாதிரிகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கால்நடைத்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்றனர்.

மற்றொருபக்கம் இந்த 3 தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

கால்நடை இணை இயக்குனர் தெரிவிக்கையில், “இப்படியாக இன்னலுக்கு உள்ளாகும் நாய், மாடு முதல் தெருக்களில் உடல்நலக்குறைவால் அவதியுறும் கால்நடைகள் மற்றும் விபத்துக்களில் சிக்கும் கால்நடைகளை மீட்கவும், அவற்றை துரிதமாக சிகிச்சைக்கு உட்படுத்தவும் கால்நடைத்துறை 24 மணி நேரமும் தயாராக உள்ளது. இவ்விஷயத்தில் பொதுமக்களும் எங்களுக்கு உதவ வேண்டும். எந்தவொரு கால்நடை அவதியுறுவதையும் கண்டால், உடனடியாக 1962 என்ற இலவச ஆம்புலன்ஸ் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரியப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவிக்கையில், “மக்களுக்கு கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். இன்றைய தேதிக்கு விலங்குகளை துன்புறுத்தும் நபர்கள்மீது சட்டப்படி குறைந்தபட்சம் 50 ரூபாய் அபராதம் தான் விதிக்கப்படும். அந்த அளவுக்கு தான் சட்டங்கள் உள்ளன. சட்டங்களை கடுமையாக்கினால் மட்டுமே இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும்” எனக்கூறி அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.