மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மதுரை சிம்மக்கல் அபிமன்னன் தெரு பகுதியை சேர்ந்தவர் ஆலடி (63). இவர், அவரது மனைவியுடன் தனி வீட்டில் வசித்துவந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் மற்றும் அவர்களது 10 வயது சிறுமியிடம் தாத்தா உறவு முறையில் நன்றாக பேசி பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் ஆலடியின் மனைவி வேலைக்கு சென்றிருந்த போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 10 வயது சிறுமியின் தாய் தந்தையர் வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்ட முதியவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து விளையாடுவது போல பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து பத்து வயது சிறுமி தனது தாய் தந்தையரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் தந்தையர் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் முதியவரை ஆலடியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.