உசிலம்பட்டி அருகே மாற்றுத்திறனாளி மூதாட்டியை பார்சல்போல கட்டி போட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தில், மூதாட்டியின் பேத்தியே நகை பறிப்பில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மூதாட்டியான முனியம்மாள் என்பவரிடம், மருத்துவ பரிசோதனை செய்ய வந்துள்ளதாகக்கூறி முகக் கவசத்தோடு வீட்டிற்குள் புகுந்த 30 வயது மதிக்கதக்க இளம்பெண், மூதாட்டியை பார்சல்போல் கட்டி வைத்துவிட்டு 11 பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டப்பகலில் அரங்கேறிய இந்த செயின் பறிப்பு சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில் உசிலம்பட்டி பகுதியில் நேற்றைய தினம் 11 பவுன் நகை அடகு ஏதும் வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கோண்டனர். அப்போது தனியார் நகைக்கடன் நிதி நிறுவனத்தில் ஒரு பெண்மணி 11 பவுன் நகையை அடகு வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெண்மணி குறித்து தகவல்களை பெற்றுக்கொண்டு அந்த பெண்மணியை கண்டுபிடித்த போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. நகைகளை திருடிய அந்த பெண் சம்பந்தப்பட்ட மூதாட்டியின் சொந்த பேத்தி உமாதேவி என்பது தெரியவந்தது. ஊரடங்கால் வருமானமின்றி தவித்த அந்த பெண் தனது பாட்டியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தரமறுத்ததால் மூதாட்டியை கட்டிப் போட்டு செயின் பறிப்பில் ஈடுபட்டதாக உமாதேவி கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பேத்தி உமாதேவியை கைது செய்த உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.