மதுரையில் கொரோனா கால நெருக்கடிகள் காரணமாக கடன் செலுத்த முடியாத பெண்ணை மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை காமராஜபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி வில்லம்மாள், இவர், அதேப் பகுதியைச் சேர்ந்த, சத்யா என்ற பெண்ணிடம் கடந்த ஜனவரி மாதம் 80 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். அதற்காக மாதம் தோறும் 8 ஆயிரம் ரூபாய் வீதம் வட்டி செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கொரோனா கால பொருளாதார நெருக்கடிகள் காரணமாக வட்டி செலுத்த முடியாமல் இருந்துள்ளார்.
இதனால், சத்யா மற்றும் காமராஜபுரத்தைச் சேர்ந்த அவரது உறவினர்கள் முனியசாமி மற்றும் சிவா ஆகிய மூவரும் வில்லம்மாளை தகாத வார்த்தையில் பேசி மிரட்டி உள்ளனர். மேலும், அதிக வட்டி கேட்டு அவரை வற்புறுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த வில்லம்மாள் நேற்று இரவு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், தொடர்புடைய சத்யா, முனியசாமி, சிவா ஆகிய மூவர் மீதும் கந்துவட்டி தடுப்பு மற்றும் பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விளக்குத்தூண் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்கலாம்: திண்டுக்கல்: பல்லி இறந்து கிடந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதி